`சாகும்வரை கம்யூனிஸ்ட்டாகவே இருப்பேன்’ என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
நேற்று தமிழ் நாளிதழ்களில் தா.பாண்டியன் அதிமுகவில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகின. மேலும், தினமலர் நாளிதழ் வெளியிடப்பட்ட செய்தியில், “தா.பாண்டியன் அதிமுகவில் இணைய முடிவு செய்துள்ளார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன” என்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன் சில நாட்களுக்கு முன்னர், தினகரன் பத்திரிகையில் இதே போன்று செய்தி வந்தது. இன்று தினமலரில் இன்னும் கூர்மையாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நான் அதிமுகவில் இணையவிருப்பதாக வந்துள்ள செய்தியில் துரும்பளவும் உண்மையில்லை. அடிப்படை ஆதாரமற்ற கடைந்தெடுத்த பச்சைப் பொய். அரசியல் பற்றி, விவாதங்கள், விமர்சனங்கள் வரலாம். ஆனால் ஐம்பதாண்டுகளுக்கும் மேலான எனது பொது வாழ்க்கையை சிதறடிக்கும் வகையில் இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எனது மகனைத் துணைவேந்தராக்க நான் முயற்சிப்பதாக ‘தினமலர்’ செய்தி வெளியிட்டுள்ளது. எனது மகன் திருச்சியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார். எனது மனைவியின் உடல் நிலை பாதிக்கப்பட்ட போது, அருகிலிருந்து கவனித்துக் கொள்வதற்காக அவரை சென்னைக்கு வரச் சொன்னேன்.
சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வேலைக்குத்தான் அவர் மனுச் செய்தார். ஆனால் அவருக்கு பல்கலைக்கழக பதிவாளர் வேலை தரப்பட்டது. அவருக்கு துணைவேந்தர் பதவியை நான் யாரிடமும் கேட்கவில்லை. துணை வேந்தர் பதவி வேண்டுவோர், அதற்காக விருப்பம் தெரிவித்து மனு அளிக்க வேண்டும்.
ஆனால் அவர் இதுவரை மனு செய்யவும் இல்லை. எனது மகன் இந்தப் பத்திரிகையின் மீது வழக்குத் தொடர்ந்தாலும் தொடர்வார். நானும், கட்சித் தலைமையோடு பேசி அனுமதி பெற்று வழக்குத் தொடருவேன்” என்றார்.
பின்னர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த பாண்டியன், ”என்னைப் பற்றியே இத்தகைய செய்திகள் கசிவதாகக் கூறுகிறீர்கள். இதுபற்றி செய்தியைக் கசியவிடுபவர்களிடம் கேளுங்கள். 234 தொகுதிகளிலும் இரட்டை இலைச் சின்னம் உள்ளதாக பத்திரிகைகளில் எழுதினார்கள். அந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் தனிநபர் சர்வாதிகாரமே கோலோச்சும்.
கலைஞர் கருணாநிதி 90 வயதை தாண்டிய பின்னரும், ஆறாவது முறையாக முதலமைச்சராகத் தன்னைத் தேர்வு செய்யக் கோரி பிரச்சாரம் செய்கிறார். அவர் வாக்குக் கேட்பது தனக்காக அல்ல, தனது மகன் ஸ்டாலினுக்கும், அடுத்ததாக, பேரன் உதயநிதிக்குமாக வாக்கு கேட்கிறார். அதிமுக, திமுகவுக்கு மாற்றாக மக்கள் நலக்கூட்டணி இருக்கும்” என்றார்.