தமிழக மக்கள் தனக்கு கொடுத்த இந்த மாபெரும் வெற்றிக்கு நன்றியை தனது செயலில் காட்டுவேன் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 134 இடங்களை பெற்று அதிமுக மகத்தான வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, வருகிற 23ஆம் தேதி ஜெயலலிதா தமிழக முதல்வராக 6வது முறை பதவியேற்க உள்ளார்.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தமிழக மக்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
சட்டப் பேரவைத் தேர்தலில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, அதே போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை மக்கள் எனது தலைமையிலான அதிமுகவுக்கு வழங்கியுள்ளனர்.
‘நான் என்றும் மக்கள் பக்கம்தான். மக்கள் என்றும் என்பக்கம் தான்' என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன. அதிமுக அரசு மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தியுள்ளது. அதற்கு மக்கள் அளித்த அங்கீகாரம்தான் வெற்றி.
ஊடகங்கள் வாயிலாகவும், பிரசாரங்கள் மூலமும் பல்வேறு பொய்களை திமுகவினர் கட்டவிழ்த்து விட்டனர். அவர்களது பொய் குற்றச்சாட்டுகளை மறுத்து விளக்கங்களை அளித்தாலும், அதைப் பற்றி கொஞ்சமும் அவர்கள் கவலைப்படவில்லை.
அதிமுக அரசைப் பற்றி கற்பனைக் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினர். இவ்வாறெல்லாம் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை வெற்றியின் மூலம் மக்கள் நிரூபித்துள்ளனர்.
அதிமுகவிற்கு மீண்டும் ஆட்சிப் பொறுப்பை மக்கள் வழங்கியுள்ளனர். தேர்தல் நடைபெற்ற 232 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 134 இடங்களில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்துள்ளனர்.
தளராத நம்பிக்கை வைத்துள்ள மக்கள், மீண்டும் ஆட்சிப் பொறுப்பை வழங்கியதற்கு நன்றி. மக்கள் நலனுக்காக புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு நன்றியைச் செயலில் காண்பிப்பேன். வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு உழைத்த அதிமுகவினருக்கு நன்றி” என அவர் குறிப்பிட்டுள்ளார்.