காஷ்மீர் ஒற்றுமை தினத்தின்போது ஹூண்டாய் நிறுவனம் ட்விட்டரில் இட்ட பதிவு சர்ச்சையான நிலையில் ஹூண்டாய் நிறுவனம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
தென்கொரிய கார் நிறுவனமான ஹூண்டாய் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் தனது கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பாகிஸ்தானில் காஷ்மீர் ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்பட்டபோது ட்விட்டரில் பதிவிட்ட ஹூண்டாய் நிறுவனம் “காஷ்மீரி சகோதரர்களின் தியாகத்தை நினைவுகூர்வோம். அவர்கள் தொடர்ந்து வரும் சுதந்திர போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம்” எனக் கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்த ட்வீட் உள்ளதாக கண்டனம் தெரிவித்த இந்தியர்கள் பலர் சமூக வலைதளங்களில் #BoycottHyundai என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஹூண்டாய் நிறுவனம் “ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் தேசியவாதத்தை நாங்கள் மதிக்கிறோம். ஹூண்டாய் இந்தியாவுக்கு தொடர்பில்லாத அந்த பதிவு, இந்த மகத்தான நாட்டிற்கான எமது ஈடு இணையற்ற அர்ப்பணிப்பு மற்றும் சேவையை புண்படுத்துகிறது. நாங்கள் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் கொண்டுள்ளோம், மேலும் இதுபோன்ற எந்தவொரு கருத்தையும் நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.