ஆபாசத்தை தூண்டும் விளம்பரங்களுக்கு தடை! – உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (10:33 IST)
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ஆபாசத்தை தூண்டும் உள்ளாடை, கருத்தடை சாதன விளம்பரங்களுக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது.

தொலைக்காட்சிகளில் வெளியாகும் கருத்தடை சாதனம், உள்ளாடை மற்றும் அழகு பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள் ஆபாச உணர்வை தூண்டுவதாக உள்ளதாக தடை கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடர்பான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் பாலியல் ரீதியான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இரவு 12 மணி முதல் காலை 6 மணிக்குள் மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என கட்டுப்பாடுகள் இருந்தாலும் அவை பின் தொடரப்படுவதில்லை என்றும், அதுபோல உள்ளாடை, கருத்தடை சாதங்கள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களின் விளம்பரங்களில் அதீத ஆபாச காட்சிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உத்தரவிட்டுள்ள மதுரை கிளை நீதிமன்றம் ஆபாச விளம்பரங்கள் தொடர்பான புகார் குறித்து தமிழக செய்தி, தகவல் தொழில்நுட்ப துறை செயலர் உள்ளிட்டவர்களை 2 வாரங்களுக்கு விளக்கம் அளிக்க சொல்லி உத்தரவிட்டுள்ளது. மேலும் தொலைக்காட்சியில் வெளியாகும் இவ்வாறான ஆபாச விளம்பரங்களுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்