ஸ்டார் உணவகங்களின் சமையலறைக்குள் இனி நாம் செல்லலாம்: உணவு பாதுகாப்பு துறை அறிவிப்பு

Webdunia
புதன், 26 ஜூன் 2019 (16:46 IST)
இனிமேல் நட்சத்திர உணவகங்களில் சமையலறைக்குள், உணவு தரமாக சமைக்கப்படுகிறதா என்பதை அறிந்துகொள்ள வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும் என தமிழக உணவுப் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.

தமிழக அரசின் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் தர நிர்ணய குழுவால், உணவகங்களுக்கு தர வரிசை நிர்ணயிப்பது தொடர்பான கூட்டம் இன்று எழும்பூரில் ரமதா நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் நட்சத்திர உணவகங்களின் சார்பில் பலரும் கலந்துகொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில் நட்சத்திர உணவகங்களில் கடைபிடிக்க வேண்டிய பத்து கட்டளைகளையும் அறிவித்து உள்ளது.

அதன் படி,

இனி உணவகத்தின் சமையல் அறையில் வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும்.

தண்ணீர் மற்றும் உணவு பொருட்களை போதிய இடைவெளியில் ஆய்வக பரிசோதனை செய்து அறிக்கை வெளியிட வேண்டும்.

வாடிக்கையாளர்களின் புகார்களை சரி செய்யும் வகையில் ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும்.

முறையாக பயிற்சி பெற்ற உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர்களை பணியில் அமர்த்த வேண்டும்.

உணவகங்களில் வாடிக்கையாளரின் கண்ணில் படுமாறு உணவு பாதுகாப்பு குறித்த பதாதைகள் வைத்திருக்க வேண்டும்.

நட்சத்திர உணவகங்களில், உணவகம் நடத்த உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

தேவையான உணவை மட்டும் தயார் செய்து, உணவு வீணாவதை தவிர்க்க வேண்டும்.

உணவு பொருளை கையாளுபவர்களுக்கு, பாதுகாப்பான முறையில் உணவை கையாளும் பயிற்சி அளித்திருக்கவேண்டும்.

வாடிக்கையாளர்களுக்கு தேவையான உணவை பறிமாற வேண்டும்.

வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்க வேண்டும்.

இப்படியாக 10 வகையான வழிமுறைகளை நட்சத்திர உணவகங்கள் கையாளும் பட்சத்தில், உணவு பாதுகாப்பு துறை சார்பில் அந்த ஓட்டலுக்கு 5 ஸ்டார்களுக்கு இணையான 5 ஸ்மைலி சான்றிதழ் வழங்கப்படும்

மேலும் 5 மற்றும் 4 ஸ்மைலிகளுக்கு குறைவாக வாங்கும் உணவகங்களுக்கு, உணவு பாதுகாப்பு மேம்படுத்தும் சட்டம் 32 படி நோட்டீஸ் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்