ஆகஸ்டில் அடைமழை வெளுத்து வாங்கும்..! தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு!

Prasanth K

வியாழன், 31 ஜூலை 2025 (10:47 IST)

நாளை ஆகஸ்டு மாதம் தொடங்க உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த மாதத்தில் பரவலாக அதிக மழைப்பொழிவு இருக்கும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளார்.

 

தமிழ்நாட்டில் மே மாதத்தில் கோடைக்காலம் என்பதையே மறக்கும் அளவிற்கு பரவலாக மழை பெய்து வந்தது. இந்த மழைப்பொழிவு ஜூனில் குறையத் தொடங்கி தற்போது ஜூலையில் பல பகுதிகளிலும் வெப்பம் வாட்டும் நிலை உள்ளது. தென்மேற்கு பருவக்காற்றால் மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய பகுதிகளில் மழைப்பொழிவு காணப்படுகிறது. இந்நிலையில் ஆகஸ்டு மாதத்தில் தமிழ்நாட்டில் மழைப்பொழிவு எப்படி இருக்கும் என்பது குறித்து சுயாதீன வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் கணிப்புகளை அளித்துள்ளார்.

 

அதன்படி, கடல் சார்ந்த அலைவுகளின் தாக்கம் இந்தியப் பெருங்கடலில் அதிகமாக காணப்படுகிறது. ராஸ்பி அலைவின் காரணமாக தெற்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இது மிக மெதுவாக வட தமிழ்நாடு, ஆந்திர கடலோரம் நோக்கி நகரக்கூடும்.

 

இதனால் ஆகஸ்டு 2 முதல் 15 வரையிலான காலக்கட்டத்தில் தமிழ்நாட்டின் வங்கக்கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், டெல்டா, மத்திய உள் மாவட்டங்கள் என ஒட்டுமொத்தமாக பல பகுதிகளில் பரவலான வெப்பசலன இடி மழை தீவிரமடையும் என கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்