தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 3 நாட்களுக்கும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில காலமாக சில பகுதிகளில் மழை வாய்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதற்கு முன்னதாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இது மேலும் 3 நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதன்படி, இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை நீலகிரி, தென்காசி, தேனி, திருநெல்வேலி, கோவை மாவட்ட மலையோர பகுதிகளில் கனமழையும், நாளை மறுநாள் நீலகிரி, கோவை பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edit by Prasanth.K