திருவண்ணாமலையில் 5 குழந்தைகள் உள்பட 7 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளனர் என்றும், அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் எவ வேலு தெரிவித்தார்.
கடந்த 3 தினங்களாக திருவண்ணாமலையில் பலத்த மழை பெய்து வருகிறது. அரசின் சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
மேலும் பலத்த மழை காரணமாக சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இவற்றில், 2 வீடுகள் மீது பாறைகள் உருண்டு விழுந்ததால், 5 குழந்தைகள் உள்பட 7 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளனர். மண் மற்றும் கல்லின் உறுதியை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் கூறினார்.
அதேபோல் இன்று பிற்பகல், ஐஐடி வல்லுநர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்ய உள்ளனர். மண்ணில் புதைந்த வீட்டிற்குள் இருப்பவர்களை மீட்பதற்கான பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இடர்பாடுகள் காரணமாக மீட்பு பணியில் சில சிக்கல்கள் உள்ளன. இவை துரிதமாக சமாளிக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.