தமிழகத்தில் புயல் காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், அதன் தாக்கம் சபரிமலையிலும் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பம்பையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. நவம்பர் 30ஆம் தேதி முதல் சபரிமலையில் விட்டு விட்டு சாரல் மழை மற்றும் மிதமான மழை பெய்து வரும் நிலையில், மலையேறும் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டதாகவும், அருகிலிருந்த கடைகளில் தஞ்சம் அடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மழை காரணமாக பாதையில் சறுக்கல் ஏற்பட்டதால் பக்தர்கள் மெதுவாகவே ஏற முடிந்தது என்றும் இதன் காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்ததாக தெரிகிறது. மேலும், வானிலை ஆய்வு மையம் சபரிமலை பகுதியில் மஞ்சள் அலர்ட் வெளியிட்டிருந்தது.
இதனால் சபரிமலை, பம்பா, நிலக்கல் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக தமிழக பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததாகவும், மழை முடிந்த பின்பு அதிக பக்தர்கள் வரக்கூடும் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.