எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி உத்தரவு

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2016 (17:39 IST)
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள பஞ்சமி நில நிலங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.


 
சென்னை காட்டாங்கொளத்தூரில், தலித்துகளுக்கு சொந்தமான மூன்றரை ஏக்கர்பஞ்சமி நிலத்தையும், அதேபோன்று பொத்தேரி ஏரி, பாசன கால்வாயையும் எஸ்.ஆர்.எம். நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக பொத்தேரியைச் சேர்ந்த சதீஷ் என்பவர், அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், எஸ்.ஆர்.எம். நிறுவனத்தின் ஆக்கிரமிப்புகள் குறித்து விசாரணை நடத்துமாறு காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த் துறைக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

விசாரணையில், எஸ்.ஆர்.எம். நிறுவனத்தின் பல்வேறு கட்டடங்கள், கார் பார்க்கிங், குடோன், இருசக்கர வாகன பார்கிங் மற்றும் சாலை, படகு குழாம் ஆகியவை பஞ்சமி மற்றும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட ஆட்சியர் மற்றும், வருவாய்துறை செயலாளர் ஆகியோர் பதில் மனுவை அறிக்கையாக தாக்கல் செய்தனர்.

பின்னர், தலைமை நீதிபதி தனது உத்தரவில், ’ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் முழுமையாக அகற்றிவிட்டு அதன் முழு விபரங்களை வருகிற 20ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்