சிறுமி ஹாசினி வழக்கு ; குற்றவாளிக்கு ஜாமீன் : கிளம்பிய எதிர்ப்பு

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2017 (13:43 IST)
சிறுமி ஹாசினி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளி தஷ்வந்திற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்த விவகாரம் சிறுமியின் பெற்றோர் உட்பட பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மாங்காடு அடுத்த மதனந்தபுரம் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பாபு என்பவரின் மகள் 6 வயது சிறுமி ஹாசினி. கடந்த பிப்ரவரி மாதம் 5–ந் தேதி மாலை அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் உள்ள கார் நிறுத்தும் பகுதியில் ஹாசினி தனது தோழிகளுடன் விளையாடிக்கொண்டு இருந்த போது காணாமல் போனாள்.
 
விசாரணையில், அதே அடுக்கு மாடியில் குடியிருக்கும் தஷ்வந்த் என்ற இளைஞர் அந்த சிறுமியை கொலை செய்தது தெரியவந்தது. சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், அப்போது அவள் சத்தம் போட்டதால் கொலை செய்து விட்டு அவளது உடலை தீ வைத்து எரித்து விட்டதாகவும் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். சிறுமியின் உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.


 

 
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. அந்நிலையில், அவரது வழக்கை விசாரித்த நீதிமன்றம், நேற்று குண்டர் சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது. மேலும், அவருக்கு ஜாமீனும் அளித்தது. இதனால், சிறுமி ஹாசினியின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்கள் தஷ்வந்திற்கு ஜாமீன் வழங்கப்பட்ட விவகாரம் வேதனையை அளித்துள்ளதாகவும், அவர் வெளியே நடமாடுவது பலருக்கும் ஆபத்து எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இதுபற்றி கருத்து தெரிவித்த ஹாசினியின் தந்தை பாபு “தஷ்வந்தின் தந்தை, அவர் மகனை வெளியே கொண்டு வருவேன் என்னிடம்  சவால் விட்டார். அவன் வெளியே வந்து பலரையும் கொல்ல தயங்க மாட்டான். அவனைப் போன்றவர்களை வெளியே விடக்கூடாது. என் மகள் இறந்ததிலிருந்து என் மனைவி வீட்டை விட்டு இன்னும் வெளியே வரவில்லை” என கண்ணீர் மல்க இன்று பேட்டியளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்