முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறையில் உள்ள முருகன், ஜீவசமாதி ஆகும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதால் கடந்த 3 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் விவகாரம் சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன், அவரின் மனைவி நளினி, பேரறிவாளன் உள்ளிட்டோர் கடந்த 26 வருடங்களுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த சில மாதங்களாகவே ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு ஏற்பட்டு காவி உடை அணிந்து, ஜடாமுடி வளர்த்து பார்ப்பதற்கு ஒரு சாமியார் போல் மாறினார் முருகன். மேலும், சிறை வாழ்க்கை தொடர்ந்து வாழ தனக்கு விருப்பமில்லை எனவும், அகஸ்டு 18ம் தேதி(இன்று), தான் ஜீவசமாதி அடைய விரும்புவதாகவும், அதற்கு அனுமதி வேண்டும் என சிறைத்துறை டிஜிபிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால், அதற்கு டிஜிபி அனுமதி கொடுக்கவில்லை.
இந்நிலையில் அவர் ஜீவசமாதி அடையப்போவதாக கூறி கடந்த 18ம் தேதி காலை முதல் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்த முருகன் சிறையில் உள்ள பெருமாள் கோவில் நீண்ட நேரம் தரிசனம் செய்தார். மேலும், அன்றிலிருந்து உணவு சாப்பிடவும் அவர் செல்லவில்லை. அதைத் தொடர்ந்து அவரிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர் சமாதானம் அடையவில்லை. அவரது உண்ணாவிரதம் இன்றும் நீடிக்கிறது. ஜீவசமாதி அடையும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
சிறையில் ஜீவசமாதி அடைவதற்கு அனுமதி கிடையாது. எனவே, அவர் தொடர்ந்து உண்ணாவிரதத்தை கடைபிடித்தால், சிறையில் அவருக்கான சலுகைகள் ரத்து செய்யப்படுவதோடு அவர் மீது நடவடிக்கையும் பாயும் என சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.