முதுகெலும்பில்லாத நத்தை – கமலைத் தாக்கும் ஹெச் ராஜாவின் அட்மின் !

Webdunia
திங்கள், 11 மார்ச் 2019 (12:54 IST)
கமல் ஒரு முதுகெலும்பில்லாத நத்தை போன்றவர் என பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா டிவிட்டரில் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

மக்கள் நீதிமய்யம் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதை அடுத்து அந்தக் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. அதனைக் கிண்டல் செய்யும் விதமாக பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன் அந்த டார்ச் லைட்டை வைத்துதான் கட்சியைக் கண்டுபிடிக்க வேண்டும் எனக் கூறினார். அதற்குப் பதிலளித்த கமல் ’ எந்தக் கட்சி என்று சொல்லவில்லை என்றால், அவர்கள் கட்சி என்று நினைக்க வேண்டியிருக்கும். ஏற்கெனவே நோட்டாவில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் அந்தக் கட்சியை தேடித்தான் கண்டுபிடிக்கணும். அதற்கு இந்த டார்ச் பயன்படும். ஏனென்றால் மக்களும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். நோட்டாவில் மிச்சமிருக்கும் கட்சியை வெளியே அனுப்புவதற்கு. அவர்களுக்கு சின்னமாக நோட்டாவையே கொடுக்கலாம்’ எனப் பதிலுரைத்தார்.

இதற்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக பாஜகவின் சர்ச்சை நாயகன் ஹெச் ராஜா தனது டிவிட்டரில் ‘விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் எதிப்பு தெரிவித்தபோது பணத்திற்காக பிழைப்பிற்காக அழுது புலம்பி மண்டியிட்டு வெட்டுகளை ஏற்ற முதுகெலும்பு இல்லாத நத்தை நாடாளும் பாஜகவை நக்கலடிப்பது வேடிக்கையாக உள்ளது. தேர்தலுக்குப் பிறகு இவரைத் தேட வேண்டியிருக்கும்’ எனக் கூறியிருக்கிறார்.

ஆனால் இந்த டிவிட்டைப் பார்த்த பலரும் அவர் ஒன்றும் நத்தையல்ல. சர்ச்சையான கருத்துகளைப் பதிந்துவிட்டு பிரச்சனைகள் வரும்போது அது நானில்லை எனது அட்மின் எனக் கூறும் ராஜாதான் முதுகெலும்பில்லாத நத்தை என அவரையேக் கலாய்த்து வருகின்றனர். மேலும் இப்போது இந்த டிவிட்டைப் போட்டது நீங்களா அல்லது உங்கள் அட்மினா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்