அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியை தொடங்கி பல ஆண்டுகள் அந்த கட்சியை நடத்தி வந்த சரத்குமார், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது திடீரென அந்த கட்சியை பாஜகவுடன் இணைத்தார். விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிட்ட நிலையில், அவர் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது, கட்சியை இணைத்த தனக்கு எந்தவிதமான முக்கியத்துவமான பதவியும் வழங்கப்படவில்லை என்றும், தனது ஆதரவாளர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி கூட வழங்கப்படவில்லை என சரத்குமார் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், புதிதாக பாஜக தலைவராக பொறுப்பேற்று இருக்கும் நயினார் நாகேந்திரன் இடம் அவர் இது குறித்து பேசியதாகவும், தனது ஆதரவாளர்களுக்காக 15 மாவட்ட தலைவருக்குப் பதவியை கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, தென் மாவட்டத்தில் தனது சமூகம் பெருவாரியாக இருப்பதால், மூன்று தொகுதிகளை குறிப்பிட்டு அதில் ஏதாவது ஒன்றில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருப்பதாகவும், அதற்கு மாநில தலைமையிடம் இருந்து சரியான பதில் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் மீண்டும் அப்செட்டில் இருக்கும் சரத்குமார், மீண்டும் தனது கட்சியை உயிர்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது, தமிழக அரசியல் எல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.