தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த சில வருடங்களாக பருவ மழை பொய்த்து போனதால் கடுமையான தண்ணீர்ப்பஞ்சம் நிலவி வருகிறது. தண்ணீர் பிரச்சனை காரணமாக பல ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளதாகவும், ஒருசில ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் பள்ளிகள், ரயில்வே நிலையங்கள் போன்றவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களோ தினமும் கைகளில் குடத்தை வைத்துக்கொண்டு மணிக்கணக்காக தண்ணீர்லாரிக்காக காத்திருக்கின்றனர்.
இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தலைமை செயலகத்தில் நடந்த தண்ணீர்ப் பிரச்சனை தொடர்பானக் கூட்டத்தில் சென்னையின் தண்ணீர்ப் பஞ்சத்த்தை நிவர்த்தி செய்யும் பொருட்டு வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் ரயில் மூலம் சுமார் 10 மில்லியன் லிட்டர் குடி தண்ணீரைக் கொண்டுவருவதற்காக தனியாக 65 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.