நடிகரும் தமிழக வெற்றி கழக கட்சியின் தலைவருமான விஜய் சமீபத்தில் கவர்னரை சந்தித்து, அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த கொடுமைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில், கவர்னரை சந்தித்தது ஏன் என்பது குறித்து விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் விஜய்யின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் அரசியல் கட்சிகள் போராடுவது குறித்து கேள்வி எழுந்தபோது, "நல்ல விஷயத்துக்காக நல்லவர்கள் போராடுகிறார்கள். அவ்வளவுதான்" என்று கூறினார்.
மேலும், கவர்னருடன் விஜய்யின் சந்திப்பு குறித்து கேள்வி எழுந்தபோது, "விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதால் இதையெல்லாம் செய்துதானே ஆகவேண்டும்" என்று பதிலளித்தார்.
முன்னதாக, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, தனது சமூக வலைத்தளத்தில் அறிக்கை வெளியிட்ட நிலையில், கவர்னரை நேரில் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.