மெரினா கடற்கரை அருகே கடல் பகுதியில் பேனா அமைப்பதற்கு முன்னாள் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக அவரது பேனாவை மெரினா கடற்கரை அருகே கடல்பகுதியில் சிலையாக அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பும், ஆதரவும் ஒரு சேர இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் மீனவ சங்கங்கள் சில பேனா சிலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியிருந்தனர்.
இந்நிலையில் பேனா சிலை அமைக்க ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம் “பேனா பொதுவானது, பேனா சிலையை மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது வெறும் பேனாவாக இருக்கக்கூடாது, அனைவரும் சுற்றுலா பார்வையிடக்கூடிய புதிய ஹாலோகிராபிக் அல்லது லேசர் நிகழ்ச்சியுடன் தமிழ்நாட்டின் வரலாற்று பேனாவாக இருக்க வேண்டும். இது சுற்றுலா பயணிகளுக்கு சுவாரஸ்யமாக இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் “பேனா என்பது பல விஷயங்களைக் குறிக்கும், பேனா ஒரு சிறந்த கருவியாகும், சிறந்த அர்த்தத்தைக் கொண்டுள்ளது. இந்த பேனா ஒரு அரசியல் கட்சிக்கு சேர்ந்தவையாக இருக்கக்கூடாது, இது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். புயல்களால் கூட சேதப்படுத்த முடியாத இந்த பேனா வலுவாக இருக்க வேண்டும். இந்த பேனா தமிழ்நாடு மக்களின் ஜனநாயகக் குரலாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
பிரம்மாண்டமான பேனா வைப்பதற்கு பதிலாக ஏழை மாணவர்களுக்கு பேனா வழங்கி உதவலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் அதற்கு பதிலளித்து பதிவிட்டுள்ள அவர் “பேனாவுக்கு ஏன் பொதுமக்களின் பணம்? இந்த பேனா சிலை வித்தியாசமானதாகவும், ஒரு சுவாரஸ்யமான சுற்றுலா தலமாக இருந்தால், சுற்றுலா மூலம் அரசாங்கம் லாபம் ஈட்டினால் அதை அரசுப் பள்ளிகள், பல்கலைக்கழகங்களுக்கு அல்லது மருத்துவமனைகளுக்கு பயன்படுத்தலாம். அது அரசாங்கத் திட்டத்தைப் பொறுத்தது” என்று கூறியுள்ளார்.
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதலுக்கு பின் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் சமீப காலமாக திமுகவின் திட்டங்களை பாராட்டி வருவதால் விரைவில் அவர் திமுகவில் இணையவும் சாத்தியம் உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.