இந்நிலையில் இன்று நடைபெற்ற பேனா சிலை அமைப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டத்தில் மீனவ அமைப்புகள், நாம் தமிழர் கட்சி உள்ளிட்டோர் பேனா சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். கழிமுக பகுதியில் பேனா சிலை அமைப்பதால் மீனவர்கள் வாழ்வாதாரமும், மீன் வளமும் பாதிக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அரிய ஆமைகளான பங்குனி ஆமைகள் எனப்படும் ஆலிவர் ரிட்லி ஆமைகள் வாழிடமாகவும், முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் இடமாகவும் மெரினா கடற்கரை உள்ளது.
இந்நிலையில் கருத்து கேட்பு கூட்டத்தில் பேனா சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “நினைவு சின்னம் வைக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதை கடலுக்குள் வைப்பதைதான் எதிர்க்கிறோம். அண்ணா அறிவாலயத்திலோ, கலைஞர் நினைவிடத்திலோ பேனாவை வைத்துக் கொள்ளலாமே! கடலுக்குள்தான் வைக்க வேண்டுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவ்வாறு கடலுக்குள் வைப்பதால் மீனவ கிராமங்கள் பாதிக்கப்படும் என அவர் பேசியபோது கீழிருந்து சிலர் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டலிட்டதால் சலசலப்பு எழுந்தது. அப்போது சிலையை வைத்தே தீருவோம் என்று கீழிருந்து ஒருவர் கூட்டலிடவே, “நீ சிலையை வைத்தால் நான் பேனா சிலையை உடைப்பேன்” என சீமான் ஆவேசமாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.