சீட்டுக் கம்பெனி நடத்தி பல கோடி மோசடி - மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஏமாற்றம்

Webdunia
வியாழன், 2 ஜூன் 2016 (14:46 IST)
தனியார் சீட்டுக் கம்பெனி நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளனர்.
 

 
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை திருக்கோகர்ணம் யானையம்மாள் வீதியைச் சேர்ந்த கஸ்தூரி திலகம் மகள் எம்.மகேஸ்வரி. இவர் கடந்த மூன்று வருடங்களாக அம்மன் சீட்டுக் கம்பெனி என்ற பெயரில் சீட்டுக் கம்பெனி நடத்தி வந்தார்.
 
இவர் சின்னப்பா தெரு, யானையம்மாள் வீதி, இடத்தெரு, திருக்கோகர்ணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் பணம் வசூலித்துள்ளார்.
 
அவ்வாறு சேர்த்த பணம் ரூபாய் 2 கோடிக்கும் அதிகமாக இருக்கும். ஒரு கட்டத்தில் பணத்தை யாருக்கும் திருப்பித் தராமல் இழுத்தடித்தார். நாங்கள் பணத்தை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுக்கவே கடந்த ஆறு மாதத்திற்கும் முன்பாக தலைமறைவாகி விட்டார்.
 
இந்நிலையில், திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் மகேஸ்வரியின் பாஸ்போர்ட் விசாரணைக்காக வந்துள்ளதாகத் தெரிகிறது. எனவே, பண மோசடியில் ஈடுபட்டுள்ள மகேஸ்வரியின் பாஸ்போர்டை முடக்குவதோடு, அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
 
இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 
அடுத்த கட்டுரையில்