10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்து, 10 வருடங்கள் வரை டாக்டராக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல், மதுரை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அரசரடி பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக, டாக்டர் என்று கூறிக்கொண்டு ஆரோக்கிய ராணி என்பவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இவரது மருத்துவமனையில் உள் நோயாளிகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்த்ததால், ஏராளமான பொதுமக்கள் இவரிடம் சிகிச்சை பெற வந்தனர்.
இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சைக்கு பின்னர் அவருக்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டன. இதனால் சந்தேகம் அடைந்த அவர், காவல்துறையில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் செல்வராஜ் திடீரென ஆரோக்கிய ராணி மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்தார். அப்போது, அவர் டாக்டர் படித்ததற்கான சான்றிதழை கேட்டபோதுதான், ஆரோக்கிய ராணி வெறும் 10ஆம் வகுப்பு மட்டுமே படித்திருந்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதனை அடுத்து, அவரது மருத்துவமனையில் இருந்த உள் நோயாளிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். போலி மருத்துவராக 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஆரோக்கிய ராணி மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டார்.