சென்னைய சூளைமேட்டை சேர்ந்த இளம்பெண் சுவாதி படுகொலை செய்யப்பட்டதை நேரில் கண்ட தமிழரசன் என்பவர் பரபரப்பு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அவர் கூறியதில் மனதை பதறச் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
வண்டலூரில் பணிபுரியும் தமிழரசன் என்பவர், தினமும் சுவாதி செல்லும் ரயிலில்தான் பயணம் செய்து வருகிறார். சம்பவம் நடந்த அன்றைக்கும் அவர் அங்கிருந்துள்ளார்.
இவர் மூலமாகத்தான், 15 நாட்களுக்கு முன் சுவாதியை ஒரு நபர் அதே ரயில் நிலையத்தில் வைத்து கன்னத்தில் பலமுறை அடித்ததாகவும், அதற்கு சுவாதி எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தார் என்றும் தகவல் தெரியவந்தது.
இந்நிலையில், ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த தமிழரசன் மேலும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் “ நான் அன்று வழக்கம் போல் ரயிலுக்காக நடை மேடையில் காத்திருந்தேன். அப்போது திடீரென உடலில் அரிவாளால் வெட்டும் போது எழும் சத்தமும், ஒரு பெண் மரண வலியில் ஓலமிடும் சத்தமும் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.
அப்போது, சுவாதி கழுத்தில் இருந்து ரத்தம் பாய்ச்சிய படி அப்படியே கீழே சாய்ந்தார். அவரது தலையும், கால்களும் மூன்று நிமிடம் அசைந்து கொண்டிருந்தது. அதன்பின் அப்படியே அசைவற்றுப் போனது. நானும் அங்கிருந்தவர்களும் அதிர்ச்சியுடன் அதையே பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது அங்கிருந்த ஒரு பெண் “போயிடுச்சிப்பா” என்று கூறிய போதுதான் எனக்கு சுயநினைவு வந்தது.
அந்த பெண்ணை கொலை செய்து விட்டு தப்பி ஓடியவனின் பின்னால் இருவர் ஓடினர். அங்கிருந்த கற்களை எடுத்து அவன் மீது வீசினர். ஆனாலும், அவன் வேகமாக ஓடினான். அப்போது தண்டவாளத்தில் ஒரு ரயில் வந்து கொண்டிருந்தது. இருந்தாலும் ரயில் வருவதற்குள் அவன் வேகமாக ஓடி தப்பிச் சென்று விட்டான்” என்று கூறியுள்ளார்.
போலீசாரின் விசாரணையில் தமிழரசனின் வாக்குமூலம் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது.