விடிய விடிய நடைபெற்ற பொறியியல் கலந்தாய்வு: அதிகாலை 4 மணிக்கு முடிந்தது!

Webdunia
புதன், 31 ஜூலை 2019 (10:08 IST)
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில் நேற்று சென்னை தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் துணை கலந்தாய்வு நடைபெற்றது. இதில் சென்னையில் இருந்து மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களுடன் வந்திருந்தனர்
 
நேற்று மதியம் துணை கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை முதலே அவர்கள் காத்திருந்தனர். ஆனால் மாலை வரை அவர்கள் கலந்தாய்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. சர்வர் பிரச்சனை உள்ளிட்ட ஒருசில பிரச்சனைகளால் கலந்தாய்வு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
 
மாலை முடிந்து இரவு ஆகியும் கலந்தாய்வு தொடங்காததால் அதிகாரிகளுடன்  மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவர்களும் பெற்றோர்களும், போராட்டத்தில்  ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. காத்திருக்க வைத்த தங்களுக்கு குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினார். 
 
இதனிடையே ஒருவழியாக இரவு 10 மணிக்கு மேல் துணை கலந்தாய்வு தொடங்கி நள்ளிரவிலும் நீடித்தது. இந்த  கலந்தாய்வு அதிகாலை 4 மணி அளவில் நிறைவு பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்