தமிழகத்தில் மீதம் உள்ள 3 சட்டசபை தொகுதிகளுக்கு, வருகிற நவம்பர் மாதம் தேர்தல் நடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப்பொருட்கள் தொடர்பாக எழுந்த புகார்களை தொடர்ந்து அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தள்ளி வைக்கப்பட்டது.
அதேபோல், திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ சீனிவேல் உடல் நடல்குறைவால் மரணமடைந்தார். எனவே மேற்கண்ட மூன்று தொகுதிகளிலும் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அதோடு அந்த மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்த ஒரு தேர்தல் ஆணைய அதிகாரி “காலியாக உள்ள தொகுதிகளுக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஜீன் மாதத்தில் இருந்து கணக்கிட்டால், வருகிற நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலோடு அந்த மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வாய்ப்பு மிகவும் குறைவு. அநேகமாக, அந்த தொகுதிகளுக்கான தேர்தல் தேதி வருகிற அக்டோபர் மாதம் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளது. பின்னர் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற அதிக வாய்ப்புள்ளது” என்று கூறினார்.