கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையம் காரணம் என நீதிமன்றம் கடிந்து கொண்டது தொடர்பான செய்திகள் மீது தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில் 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றதா என தேர்தல் ஆணையம் சரியாக கவனிக்கவில்லை என்றும், கொரோனா பரவலுக்காக தேர்தல் ஆணையம் மீது கொலை வழக்கே பதிவு செய்யலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.
இதுதொடர்பான செய்திகள் தினசரி மற்றும் செய்தி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்துள்ளது. அதில் “நீதிபதிகள் வாய் வார்த்தையாக சொல்வதை ஊடகங்கள் செய்தியாக வெளியிட கூடாது. இது தேர்தல் ஆணையத்தை களங்கப்படுத்தும் விதமாக உள்ளது” என தெரிவித்துள்ளது.