எடப்பாடிக்கு 3-வது இடம் தான்; அவர் பேச்சை கேட்க மாட்டோம்: அதிமுக எம்எல்ஏ அதிரடி!

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2017 (12:34 IST)
குடியரசுத் தலைவராக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில் புதிய குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான குடியரசுத் தலைவர் தேர்தல் பணிகள் ஆரம்பித்துள்ளன.


 
 
பாஜக சார்பில் பீகார் ஆளுநராக உள்ள ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீராகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
 
குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் ஆதரவு யாருக்கு என்ற அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தான் அறிவிப்பார் என கடந்த சில தினங்களாக தினகரன் உள்ளிட்ட அவரது அணியில் உள்ளவர்கள் கூறி வந்தனர். ஆனால் திடீரென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் ஆதரவு பாஜகவுக்கு என அறிவித்தார்.
 
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் பேட்டியளித்துள்ளார். இது குறித்து இன்று காலை எம்எல்ஏ வெற்றிவேல் செய்தியளார்களிடம் பேசியபோது, குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவு எனும் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பை ஏற்க முடியாது என்றார்.
 
மேலும், குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக அம்மா அணி யாருக்கு ஆதரவு என்பதை கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தான் அறிவிப்பார். அவர் சொல்லுவது தான் செல்லுபடியாகும், மற்றவர்கள் சொல்வது செல்லுபடியாகாது. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் முதலமைச்சர், கட்சியில் தலைமை நிலையச் செயலாளர் எனும் சாதாரண பொறுப்பில் தான் இருக்கிறார்.
 
கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா, துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், அதற்கு பிறகு 3-வது இடத்தில் தான் இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்றார் எம்எல்ஏ வெற்றிவேல்.
அடுத்த கட்டுரையில்