தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் ஆகியோர், இந்த கைது விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி வி.பார்த்திபன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்க உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசின் காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, "கைது செய்யப்பட்டபோது நடந்த சம்பவங்கள் குறித்து இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வரும் நிலையில், ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பதற்கு அரசு ஏன் அச்சப்படுகிறது?" என்று நீதிபதிகள் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பு, "விசாரணைக்கு அச்சப்படவில்லை. ஆனால், ஆணையத்தின் தலைவராக வேறு ஒரு நீதிபதியை நியமிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தது. ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், "ஓய்வுபெற்ற நீதிபதி வி.பார்த்திபன் தனது விசாரணையை தொடங்கலாம். காவல்துறை தங்களிடம் உள்ள ஆதாரங்களை ஆணையத்திடம் ஒப்படைக்கலாம்" என்று உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.