இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் தங்கள் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதை ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது லஷ்கர்-இ-தொய்பாவும் இதே உண்மையை உறுதிப்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த மே 7 அன்று பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் நடந்த நான்கு மாதங்களுக்கு பிறகு, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தளபதி மசூத் இல்யாஸ் காஷ்மீரி, ஒரு வீடியோவில், பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ் தலைமையகமான ஜாமியா மஸ்ஜித் சுப்ஹான் அல்லா மீதான தாக்குதலில் அஸாரின் குடும்பம் பாதிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டார்.
இந்த வரிசையில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பும் தங்கள் முகாம் பாதிக்கப்பட்டதை தற்போது ஒப்புக்கொண்டுள்ளது. லஷ்கர் பயங்கரவாத தளபதி காசிம், முரிட்கேயில் உள்ள மார்கஸ் தைபா கட்டிடம் இந்திய தாக்குதலில் அழிக்கப்பட்டதாகவும், அதை மீண்டும் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.