பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருக்கும் வேந்தர் மூவீஸ் மதன், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மதன் மட்டுமின்றி இந்த விஷயத்தில் பச்சமுத்துவையும் அமலாக்கத்துறையினர் விசாரணை செய்யவுள்ளதாகவும், இதனால் பச்சமுத்துவுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் மதனுக்கு சம்மன் அனுப்பி அவரிடம் விசாரணை செய்தனர். விசாரணையின் முடிவில் மதன் பல கோடி ரூபாய் கருப்புப் பண முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டார். மேலும் முறைகேடாக வசூலித்த பணம் அனைத்தையும் பச்சமுத்துவிடம் ஒப்படைத்துவிட்டதாக, மதன் கூறியுள்ளதால் அடுத்தகட்டமாக பச்சமுத்துவிடம் விசாரணை செய்யவுள்ளதாகவும், விசாரணைக்கு பின்னரே அவர் கைது செய்யப்படுவாரா? என்பது தெரியவரும் என்றும் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வேந்தர் மூவீஸ் மதன் ஏற்கனவே சென்னை எஸ்ஆர்எம் மருத்துவ பல்கலைக்கழகத்தில் சீட் வாங்கித் தருவதாக, ரூ.80 கோடி வரை வசூலித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவர் மீண்டும் தற்போது கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.