நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

Siva
ஞாயிறு, 22 செப்டம்பர் 2024 (14:47 IST)
நெல்லையில் இன்று காலை 11:50 அளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதாகவும், தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தென்காசி மாவட்டத்தில் கடையம், சேர்வைகாரன்பட்டி, முதலியார்பட்டி, பொட்டல்புதூர், ரவணசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி, சிவசைலம், ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில், மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் விக்கிரமசிங்கபுரம், பாபநாசம், சிவந்திபுரம், அகஸ்தியர்பட்டி, அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, சிங்கம்பட்டி, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், கோபாலசமுத்திரம் ஆகிய பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிகிறது.

பல இடங்களில் வீடுகளில் உள்ள பொருட்கள் உருண்டதாகவும், இதனை பார்த்த பொதுமக்கள் அச்சத்துடன் உடனே வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து தெருக்களில் நின்று கொண்டிருந்ததாகவும் தெரிகிறது.

இந்த பகுதியில் இயங்கி வரும் கல்குவாரிகளில், பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் நவீன வெடிபொருட்களை வெடித்து பாறைகளை உடைத்து வருவதால் நில அதிர்வு ஏற்படுவதாக அங்குள்ள மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதையடுத்து, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இயங்கி வரும் கல்குவாரி மற்றும் மண் குவாரிகளை அரசு உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் இந்த பகுதியில் உள்ள மக்கள் பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்