மாணவியை மது விருந்துக்கு அழைத்த கல்லூரி பேராசிரியர்கள்.! நெல்லையில் அதிர்ச்சி..!!

Senthil Velan

சனி, 14 செப்டம்பர் 2024 (11:16 IST)
நெல்லையில் தனியார் கல்லூரி மாணவி ஒருவரை இரவு நேரத்தில், இரண்டு பேராசிரியர்கள்  மது விருந்துக்கு அழைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
நெல்லை மாநகர பகுதியில் உள்ள கல்லூரியில் மாணவி ஒருவர் முதுகலை பட்டப் படிப்பு படித்து வருகிறார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் இரண்டு பேர்  இரவு நேரத்தில், மாணவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு விரும்பத்தகாத வகையில் பேசியதோடு மது குடிப்பதற்கும் அழைத்துள்ளனர்.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, நடந்த சம்பவங்கள் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த பெற்றோர் பாளை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  இதற்கிடையே மறுநாளே அந்த புகாரை அவர்கள் வாபஸ் பெற்றனர்.  எனது மகளின் படிப்பு பாதிக்கப்பட்டு விடும் எனவும்  மேல் நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் எனவும் மாணவியின் பெற்றோர் போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது.
 
இதையடுத்து வேறு வழியில்லாமல் அந்த புகார் மனுவை போலீசார் கிடப்பில் போட்டுவிட்டனர். மேலும், பேராசியர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று மாணவியின் பெற்றோர் கூறியுள்ளனர். இதனை, எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கி கொண்ட போலீஸார் அவர்களை அனுப்பி வைத்தனர். 
 
இந்த நிலையில் மாணவியிடம் தகாத முறையில் பேராசிரியர்கள் பேசியது தொடர்பான செய்தி வெளியான நிலையில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த விவகாரம் பெரிதானதை உணர்ந்த கல்லூரி நிர்வாகம் இரு பேராசிரியர்களை டிஸ்மிஸ் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.


ALSO READ: தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.! ரூ.55 ஆயிரத்தை நெருங்குவதால் அதிர்ச்சி.!!
 
புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கல்லூரி மாணவிக்கு போன் செய்து, மது அருந்த அழைத்த பேராசிரியரான செபாஸ்டின் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு பேராசிரியரை தேடி வருவதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்