பதவி விலகவும் தயார்: திமுகவினருக்கும் ஷாக் கொடுத்த துரைமுருகன்

Webdunia
வெள்ளி, 3 மே 2019 (15:11 IST)
திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சவால் விட்டு, நான் பதவி விலகவும் தயார் என குறிப்பிட்டுள்ளார். 
 
சூலூர் சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதால், எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பிரச்சார கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்ட போது 12 கிலோ தங்கமும் ரூ.13 கோடி ரூபாயும் கைப்பற்றப்பட்டது. இவ்வளவு பணம் அவர்களுக்கு எந்த வகையில் இருந்து வருகிறது என மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் என பேசியிருந்தார். 
 
இதற்கு பதில் அளிக்கும் விதமாக துரைமுருகன் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, இதுதான் எடப்பாடி பழனிசாமி என்னை பற்றி கண்டுபிடித்து கூறிய அரிய பெரிய கருத்து. அவர் இவ்வளவு விவரமற்றவராக இருப்பார் என நான் நினைக்கவில்லை. 
எடப்பாடி பழனிசாமி கூறியது அத்தனையும் ஜமூக்காளத்தில் வடிகட்டிய பொய். எது உண்மை என வருமான வரித்துறை கொடுத்துள்ள பஞ்சன்நாமாவை பார்த்தாலே தெரியும். கடைசியாக ஒரு சவால்...
 
முதல்வர் கூற்றுப்படி எங்களுக்கு சொந்தமான இடங்களில் 12 கிலோ தங்கமும் 13 கோடி ரூபாயும் கைப்பற்றியதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்தால் நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன். இல்லாவிட்டால் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயாரா? என கேட்டுள்ளார். 
 
இந்த சவால் திமுகவினருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனெனில் பொய்யான தகவலை பிரச்சாரத்திற்காக பரப்பி வரும் அவருக்காக எதற்கு நீங்கள் பதவி விலகுவதாக கூற வேண்டும் என திமுகவினர் கருதுகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்