புரோக்கர் செய்த பிராடுதனத்தால் நின்று போன திருமணம்.. ஏமாற்றத்தில் மணமகன்..!

Mahendran
செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (13:25 IST)
புரோக்கர் செய்த பிராடுத்தனம் காரணமாக நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட திருமணம் நின்று போனதாக கூறப்படுவதை அடுத்து மணமகன் பரிதாபமாக இருப்பதாக தெரிகிறது. 
 
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 29 வயது மணமகன் ஒருவருக்கு பெண் பார்த்து தருவதாக புரோக்கர் ஒருவர் ஒப்புக்கொண்டு உள்ளார். அவர் 23 வயது பட்டதாரி பெண் ஒருவரை காட்டிய நிலையில் பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு 10 பவுன் நகை மற்றும் கார் ஆகியவை வரதட்சணையாக கொடுப்பார்கள் என்றும் கூறியுள்ளார். 
 
அதேபோல் பெண் வீட்டாரிடமும் மாப்பிள்ளை வீட்டார் வசதியானவர்கள் என்றும் பல ஏக்கர் நிலம் இருக்கிறது என்றும் பெண்ணுக்கு 25 பவுன் நகை போடுவார்கள் என்றும் கூறியுள்ளார். 
 
புரோக்கர் சொன்ன பொய்யை இரு தரப்பினரும் நம்பிய நிலையில் நேற்று நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது புரோக்கர் இரு தரப்பினரிடம் தலா ஒரு லட்ச ரூபாய் புரோக்கர் கமிஷனை வாங்கிக் கொண்டு தனக்கு வேறு வேலை இருப்பதால் நிச்சயதார்த்தத்துக்கு வர முடியாது என்று கூறியுள்ளார். 
 
இந்த நிலையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த பிறகு நகைகள் பற்றி மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் பேசிய போது தான் இருவருமே தாங்கள் நகை போடுவதாக சொல்லவில்லை என்றும் இது புரோக்கரின் பிராடுத்தனம் என்றும் தெரியவந்தது. 
 
இதனை அடுத்து நிச்சயதார்த்தம் நடந்தாலும் பரவாயில்லை இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று மணமகள் வீட்டார் கூறியதாகவும் இதை அடுத்து மணமகன் பரிதாபமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது இரு தரப்பினரும் புரோக்கரை தேடி வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்