ஜாபர் சாதிக்குடன் தொழில் பார்ட்னராக இணைந்தது தொடர்பாக மீண்டும் விசாரணைக்கு அழைத்த நிலையில், பதிலளிக்க கால அவகாசம் கேட்டு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு இயக்குனர் அமீர் கடிதம் எழுதியுள்ளார்.
சுமார் 2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளரும் சென்னை மேற்கு மாவட்ட திமுக அயலக அணி அமைப்பாளரும் ஆக இருந்த ஜாபர் சாதிக்கை என்சிபி அதிகாரிகள் கடந்த மார்ச் 9ம் தேதி கைது செய்தனர்.
போதை பொருள் கடத்தல் தொடர்பாக மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இயக்குநர் அமீருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் இரண்டாம் தேதி டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இயக்குநர் அமீர் ஆஜராகி, ஜாபர் சாதிக் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். சுமார் 11 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் ஜாபர் சாதிக் மற்றும் அமீருக்கு தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் துறையினர் இன்று நடத்தி வருகின்றனர். சென்னை தியாகராய நகர் ராஜன் தெருவில் உள்ள இயக்குநர் அமீர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நடக்கும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குனர் அமீரை மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளது. 2020ஆம் ஆண்டு முதல் 2023 வரை அமீர் பெயரில் வாங்கப்பட்டுள்ள சொத்துக்கள், வங்கி கணக்கு ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளது.
ஜாபர் சாதிக்குடன் தொழில் பார்ட்னராக இணைந்தது எப்படி? என்ற விவரங்களும் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் விசாரணைக்கு கால அவகாசம் கேட்டு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு இயக்குனர் அமீர் கடிதம் எழுதியுள்ளார்.