இந்தி மீது நம்பிக்கை இருந்தால், தமிழை அலுவல் மொழிகளாக்க மத்திய அரசு தயங்குவது ஏன்? ராமதாஸ்

Webdunia
சனி, 5 ஆகஸ்ட் 2023 (15:17 IST)
இந்தி மீது நம்பிக்கை இருந்தால், தமிழ் உள்ளிட்ட மொழிகளை அலுவல் மொழிகளாக்க  மத்திய அரசு  தயங்குவது ஏன்? என்ற கேள்வியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
இந்திய மக்கள் இந்தியை ஏற்றுக்கொள்ளும் வேகம் குறைவாக இருந்தாலும் கூட, என்றாவது ஒருநாள் ஒட்டுமொத்த இந்தியர்களும் எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் இந்தியை ஏற்றுக் கொண்டாகத் தான் வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சரின் கருத்து இந்தி மீதான அவரது நம்பிக்கையைக் காட்டவில்லை; மாறாக, இந்தித் திணிப்பின் மீதான நம்பிக்கையையே காட்டுகிறது.  இந்தித் திணிப்பு முயற்சிகள் ஒருபோது வெல்லாது.
 
இந்தியை ஏற்றுக்கொள்ள தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள்  ஏங்கவில்லை; அவை எப்போது எதிர்ப்பு நிலையில் தான் உள்ளன. அத்தகைய சூழலில் அனைவரும்  இந்தியை எதிர்ப்பின்று ஏற்கும் நிலை வரும் என்றால், அத்தகைய நிலையை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிடுகிறது என்று தான் பொருள். கடந்த காலங்களில் அத்தகைய முயற்சிகள் எப்படி வீழ்த்தப்பட்டனவோ, அதைப்போலவே  இனிவரும் காலங்களிலும்  வீழ்த்தப்படும். இது உறுதி.
 
எந்த மொழியுடனும் இந்தி போட்டிப்போடவில்லை என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறுவது உண்மையென்றால், தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணை மொழிகளுக்கு உரிய தகுதியை வழங்க மத்திய அரசு மறுப்பது ஏன்? மாநில மொழிகள் மத்திய அலுவல் மொழிகளாக்கப்பட்டால் இந்தி  வீழ்ந்து விடும் என்ற அச்சத்தால் தானே?
 
இந்தி மொழியின் செழுமை மீதும், வலிமை மீதும்  நம்பிக்கை இருந்தால்,  தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணை மொழிகள் அனைத்தையும்  மத்திய அரசின் அலுவல் மொழிகளாக அறிவிக்க மத்திய அரசு தயங்குவது ஏன்?  தமிழ் உள்ளிட்ட  எட்டாவது அட்டவணை மொழிகள் அனைத்தையும் அலுவல் மொழிகளாக  மத்திய அரசு அறிவிக்கட்டும். அவற்றில் எந்த மொழி சிறந்த மொழியோ, எது  இலக்கிய வளம் மிக்க மொழியோ, எது இலக்கணத்தில் சிறந்த மொழியோ  அது மக்கள் மனங்களை ஆளட்டும்!
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்