திமுக கட்சியின் முக்கிய நபர்களில் ஒருவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் திருச்சி சிவா. அவரது திருச்சியில் உள்ள வீட்டில் நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் நடத்திய தாக்குதலில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த பைக்குகளும் சேதமடைந்துள்ளன.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் சிலரை கைது செய்துள்ளனர். சமீபத்தில் திருச்சி சிவாவின் வீடு உள்ள பகுதியில் புதிய விளையாட்டு திடல் திறக்கப்பட்டது. அதன் திறப்பு விழா கல்வெட்டில் திருச்சி சிவா பெயர் இடம்பெறாதது குறித்து திருச்சி சிவா ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் திமுக அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்களுக்கும், திருச்சி சிவா ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.