என் பெயர் கருணாநிதி; இவர் பெயர் துரைமுருகன்: பேசும் திமுக தலைவர்!

Webdunia
திங்கள், 29 மே 2017 (13:37 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாளையொட்டி அவரது சட்டசபை வைர விழா கொண்டாடப்பட உள்ளது. திமுக தலைவர் கருணாநிதி தமிழக சட்டசபையில் அடியெடுத்துவைத்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை வைரவிழாவாக திமுகவினர் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.


 
 
இந்தியாவின் முக்கியமான அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ள இந்த விழாவுக்கு விழா நாயகர் கருணாநிதியே கலந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளது அவரது உடல்நிலை. திமுக தலைவர் கருணாநிதிக்கு வயது முதுமை காரணமாக உடல் நிலை சரியில்லாமல் போனது.
 
இதனால் சில மாதங்களுக்கு முன்னர் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் வீடு திரும்பிய அவர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஓய்வெடுத்து வருகிறார். அவரது சட்டசபை வைர விழாவுக்கு கலந்துகொள்ள முடியாத நிலையில் தான் உள்ளார் கருணாநிதி.
 
இந்நிலையில் திமுக துணைப்பொதுச்செயலாளர் துரைமுருகன், தனது முகநூல் பக்கத்தில் திமுக தலைவர் கருணாநிதி குறித்து உருக்கமாக சில தகவல்களை கூறியுள்ளார். அதில், தலைவர் கலைஞரின் உடல்நிலை குறித்து கழக முன்னோடி துரைமுருகன். தொண்டைக்குழி வழியாக குழாயை உள்ளே விட்டு அடிக்கடி சளி எடுக்க வேண்டி இருப்பதால் பேச இயலவில்லை.
 
கடந்த இருதினங்களுக்கு முன் குழாயை எடுத்துவிட்டு துவாரத்தையும் அடைத்து மருத்துவர்கள் பேச சொன்னார்கள்.
தலைவரிடம் உங்கள் பெயர் என்ன எனக்கேட்க? என் பெயர் கருணாநிதி என்றார். அடுத்ததாக உங்களுக்கு யாரைப்பிடிக்கும் எனக்கேட்க? அறிஞர் அண்ணா என்றார். பின்னர் என்னை யார் எனக்கேட்க? துரை என்றதும், என் கண்கள் கசிந்தன. மீண்டு வருவார் தலைவர் என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்