ரஜினிக்கு எவ்வளவு ஆதரவு? - சர்வேயில் இறங்கிய மத்திய உளவுத்துறை

Webdunia
திங்கள், 29 மே 2017 (13:17 IST)
நடிகர் ரஜினிகாந்த் அரசியல்  கட்சி தொடங்கினால், அவருக்கு எத்தனை சதவீத மக்கள் ஆதரிப்பார்கள், அதனால் எந்த கட்சியின் ஓட்டு வங்கி சரியும் என்பதை உளவுத்துறை மூலம் தெரிந்து கொள்ளும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
கடந்த 19-ம் தேதி ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி “இங்கே சிஸ்டம் சரியில்லை. நாட்டை காப்பாற்ற போருக்கு தயாராக  இருங்கள்” என அவர் தனது அரசியல் பிரவேசம் பற்றி சூசகமாக பேசினார். இதனால் அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும், வருகிற ஜூலை மாதம் தனது அரசியல் எண்ட்ரியை பற்றி ரஜினி தெரிவிப்பார் என அவரின் சகோதரர் சத்யநாராயணாவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம், ரஜினிகாந்த் அரசியலுகு வருவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
 
இந்நிலையில், ஒருவேளை அப்படி அவர் கட்சி தொடங்கினால், தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில், எத்தனை சதவீத மக்கள் அவரை ஆதரிப்பார்கள், இதனால் எந்த கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்பது பற்றி மத்திய அரசின் உளவுத்துறை ஒரு சர்வே எடுத்துள்ளது.
 
அதன்படி, பாமாக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்குதான் பாதிப்பு ஏற்படும் என்பது தெரியவந்துள்ளது. ஏனெனில், வன்னியர்கள் மற்றும் தலித் இன மக்களில் ஏராளமான ரஜினி ரசிகர்கள் உள்ளனர். எனவே, அவர்கள் ரஜினிக்கு வாக்களிக்க அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறதாம். அதேபோல், அந்த கட்சிகளிலிருந்து விலகி ரஜினி தொடங்கும் கட்சிக்கு பலர் சென்று விடுவார்கள் எனக்கூறப்படுகிறது.


 

 
அடுத்ததாக, திமுக-விலும் கொஞ்சம் பாதிப்பு இருக்குமாம். ஏனெனில், அந்த கட்சியிலும் ரஜினி ரசிகர்கள் கணிசமாக இருக்கிறார்கள். கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாதவர்கள், தேர்தல் வரும் போது ரஜினி கட்சிக்கு தாவ முயற்சிக்கலாம் அல்லது ரஜினிக்கு ஓட்டாவது போட்டு விடுவார்கள் எனத் தெரிய வந்துள்ளது.
 
அதேபோல், அதிமுக கட்சியிலும் இருந்தும் சிலர் ரஜினி கட்சிக்கு தாவுவார்கள் என எதிர்பார்க்கலாம். ஏனெனில், ஜெயலிதாவிற்கு பின் சரியான தலைமையில்லாமல் பயணிக்கும் அந்த கட்சியிலிருந்து பலர் ரஜினியை ஆதரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. சர்வே மூலம் தெரிய வந்த இந்த தகவல்கள் குறித்து பாஜக மேலிடம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
 
ஆனால், இதுவெல்லாம் சர்வே மற்றும் கணிப்பின் மூலம் தெரிய வந்தாலும், ரஜினிக்கு எத்தனை பேர் ஆதரிப்பார்கள் என்பது அவர் கட்சி தொடங்கி, தேர்தலை சந்திக்கும்போதுதான் தெரிய வரும்.
அடுத்த கட்டுரையில்