நேற்று கூட்டுறவு தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு வெளியான நிலையில் இன்று டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில்(டாஸ்மாக்) பணிபுரியும் 2024-25 ஆண்டுக்கான மிகை ஊதியம் பணியாளர்களுக்கு (போனஸ்) மற்றும் கருணைத் தொகை 2025 -2026-ல் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பணிபுரியும் (சி மற்றும் டி) பிரிவு ஊழியர்கள் மற்றும் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் தகுதியுடைய கடைப்பணியாளர்கள் 20 சதவிகிதம் வரை மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவதற்கு வழங்கப்படும்.
இதனடிப்படையில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் பணிபுரியும் 24816 தகுதியுடைய நபர்களுக்கு ரூ.40,62 கோடி செலவில் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
அரசின் இந்த நடவடிக்கை தமிழ்நாடு மாநில வாணிபக் கழக நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மிகவும் ஈடுபாட்டுடனும், ஊக்கத்துடனும் பணியாற்றுவதையும், எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதை உறுதி செய்திட வழிவகை செய்யும்”
இவ்வாறு தமிழ்நாடு அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.