கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெறுகிறது.
இதில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி ஆர் நடராஜன்,மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கோவை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேயர், துணை மேயர் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் கோவை மாநகராட்சி மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்றுள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் இனி மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்படும். வழக்கமாக இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் முக்கிய பங்கு வகிப்பார்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனைமலை பகுதியில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொள்வதற்காக சென்றிருப்பதால் இன்று நடைபெறும் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.
இதனால் கோவை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் மாவட்ட வருவாய் அலுவலரிடமும் நாடாளுமன்ற உறுப்பினரிடமும் மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளாதது குறித்து முகம் சுழித்து கொண்டனர். முக்கியமான கூட்டத்தில் ஆட்சியர் கலந்து கொள்ளாதது கண்டனத்திற்குரியது என்பது போல் பேசினர். அவர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே பனைமலை பகுதியில் நடைபெறும் முக்கியமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு ஷெட்யூல் செய்துள்ளதால் அவர் இதில் கலந்து கொள்ள வில்லை என தெரிவித்தார்.
இருப்பினும் கோவை சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளாததால் தங்களுடைய கேள்விகளுக்கு யார் பதில் அளிப்பார்கள் எனவும் தங்களது தேவைகளை யாரிடம் கூறுவது எனவும் கோபித்துக் கொண்டனர்.