கூட்டணி கட்சியின் தலைவர் என்ற முறையில் மரியாதை நிமித்தமாக மு.க.ஸ்டாலினை சந்தித்தாக தினேஷ் குண்டுராவ் பேட்டி.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் இப்போதே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன. காங்கிரஸ் கட்சி இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என சமீப காலமாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சென்னை வந்துள்ளார். இவர் சமீபத்தில் அடுத்த ஆட்சி கூட்டணி ஆட்சிதான் என்றும் வரும் தேர்தலில் திமுக காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமையும் என்று பேசி சர்ச்சையை கிளப்பினார்.
இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை தினேஷ் குண்டுராவ் சந்தித்து பேசினார். சந்திப்பு முடிந்த பின், செய்தியாளர்களை சந்தித்த தினேஷ் குண்டுராவ் பின்வருமாறு பேசினார்...
கூட்டணி கட்சியின் தலைவர் என்ற முறையில் மரியாதை நிமித்தமாக மு.க.ஸ்டாலினை சந்தித்தேன். இந்த சந்திப்பு மிகவும் நல்ல சந்திப்பாக இருந்தது. தமிழகத்தில் தி.மு.க.வும், காங்கிரசும் இணைந்து சிறப்பாக செயல்படுகின்றன. வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற காங்கிரஸ் கடுமையாக பாடுபடும்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியை வெற்றியடைய செய்து, அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக ஆக்குவோம். அதற்கு காங்கிரஸ் கட்சி பக்க பலமாக இருக்கும் என தெரிவித்தார்.