வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

Siva

செவ்வாய், 1 ஜூலை 2025 (16:17 IST)
'ஓரணியில் தமிழ்நாடு' பிரச்சார திட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு செல்வீர்களா?" என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "நான் அந்த பகுதிக்கு செல்வதாக இருந்தால் நிச்சயம் செல்வேன்," என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
 
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், இன்று ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற புதிய மக்கள் சந்திப்பு முன்னெடுப்பை தொடங்கி வைத்து, செய்தியாளர்களிடம் பேசியபோது இந்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.
 
"தி.மு.க. அரசியல் வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வரலாற்றிலும் மிக முக்கியமான நாளாக இந்த நாள் அமையப் போகிறது. 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற மகத்தான முன்னெடுப்பை தி.மு.க. சார்பில் நான் தொடங்கி வைக்கிறேன். இன்று தொடங்கி, அடுத்த 45 நாட்களுக்கு இந்தப் பயணம் தொடரும்," என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்பின் அவர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தார்.
 
கேள்வி: எதிர்க்கட்சித் தலைவர் மக்களை சந்திக்கும் பயணத்தை 7-ஆம் தேதியிலிருந்து தொடங்கப்போகிறார். இந்த பயணத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
 
பதில்: அவர் இப்போதுதான் மக்களை சந்திக்கப் போகிறார். நாங்கள் எப்போதிலிருந்தோ சந்தித்து கொண்டிருக்கிறோம்.
 
கேள்வி: எடப்பாடி பழனிசாமி அவர்களின் வீட்டிற்குச் செல்வீர்களா?
 
பதில்: அது அங்கு இருக்கக்கூடிய சூழ்நிலையைப் பொறுத்திருக்கிறது. பொறுப்பு ஒவ்வொருவரிடமும் ஒப்படைத்திருக்கிறோம். அவர்கள் சூழ்நிலைக்கேற்றவாறு செல்வார்கள். நான் அந்தப் பகுதியில் இருந்தால் நிச்சயம் செல்வேன்.
 
கேள்வி: தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள்தான் இருக்கிறது. ஆனால் கூட்டணிக் கட்சிகள் கூடுதல் இடங்கள் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதை தி.மு.க. எப்படி சமாளிக்கப் போகிறது?
 
பதில்: தேர்தல் தேதி அறிவித்த பிறகு நாங்கள் உட்கார்ந்து பேசுவோம். அதை சமாளித்துவிடுவோம்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்