மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை அடையாறில் கட்டப்பட்டுள்ள மணி மண்டபத்தை இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். இந்த விழாவுக்கு ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
முதலில் இந்த மணி மண்டப திறப்பு விழா நிகழ்வில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமை வகிப்பார் எனவும், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்துவைத்து, சிவாஜி கணேசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என்றும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது.
ஆனால் சிவாஜி குடும்பத்தின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், எங்கள் தந்தைக்கு மணி மண்டபம் அமைப்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டமாக இருந்தது. இப்போது, அவர் உயிருடன் இருந்திருந்தால் அவரே முன் நின்று மணிமண்டபத்தை திறந்து வைத்திருப்பார். ஆனால், அந்த திறப்புவிழாவில் முதல்வரோ துணை முதல்வரோ கலந்து கொள்ளாதது மகிழ்ச்சிக்கு இணையாகவே ஏமாற்றத்தைத் தருகிறது.
தனது திரைப்படங்கள் வாயிலாக தமிழ் கலாச்சாரத்துக்கும் தமிழ் மொழிக்கும் தொண்டாற்றிய ஒரு பெரும் நடிகரின் மணி மண்டப திறப்பு விழாவில் அரசு சார்பில் முதல்வர், துணை முதல்வர் கலந்து கொள்ளாதது அப்பாவை அவமரியாதை செய்வதாகவே நாங்கள் கருதுகிறோம் என கூறியிருந்தனர்.
இதனையடுத்து சிவாஜி குடும்பத்தின் கோரிக்கையை ஏற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு மணி மண்டபத்தை திறந்து வைப்பார் என தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது.
இதனையடுத்து இன்று துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சிவாஜி மணிமண்டபத்தை திறந்து வைத்தார். இந்த விழாவுக்கு அரசு சார்பில் துணை முதல்வர் ஓபிஎஸ் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் அதிமுகவினர் சிவாஜி ரசிகர்களும் கலந்துகொண்டனர்.
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள், சிவாஜி குடும்பத்தினர், மூத்த நடிகர், நடிகைகள், நடிகர் ரஜினிகாந்த், விஜயகுமார் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர். இந்த விழாவுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்தை துணை முதல்வர் ஓபிஎஸ் கை குலுக்கி வரவேற்றார். மேலும் இந்த விழாவுக்கு நடிகர் கமலஹாசனும் வருகை புரிந்தார்.