வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் ஏற்கனவே குறைவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தற்போதைய நிலவரப்படி, அதன் நகரும் வேகம் மேலும் குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு 430 கிலோமீட்டர் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இந்த நிலையில், இந்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் 10 கிலோமீட்டரிலிருந்து 9 கிலோமீட்டராக குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நேற்று இந்த மண்டலம் வெறும் 2 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்தது. இன்று கூட இது குறைந்த வேகத்திலேயே நகர்ந்து வருகிறது.
மேலும், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது என வானிலை ஆய்வு மையம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இருப்பினும், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் சில உள் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த தாழ்வு மண்டலம் நாளை அல்லது நாளை மறுநாள் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாமல்லபுரம் மற்றும் பரங்கிப்பேட்டை இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது மேலும் அருகில் நெருங்கும் போது, துல்லியமாக எந்த இடத்தில் கரையை கடக்கும் என தீர்மானிக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.