வரதட்சணை கொடுமையால் மருமகள் கொலை : கணவன் குடும்பத்திற்கு ஆயுள் தண்டனை

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2016 (19:00 IST)
கரூர் அருகே வரதட்சணை கொடுமையால் மருமகள் தலையில் கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் அப்பா, அம்மா, மகன் என ஒரே குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு 2 ஆயுள் தண்டனை விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.


 

 
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கிழக்கு வெள்ளிவாடி கிராமத்தை சார்ந்த முருகேஸ்வரியும், அதே பகுதியை சார்ந்த முனியப்பனும் காதலித்து கடந்த 26.11.2006ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து அவர்கள் இருவரும் கரூரை அடுத்த கணபதிபாளையத்தில் வசித்து வந்தனர். 
 
இதற்கிடையில் முருகேஸ்வரியிடம் 1 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் 15 பவுன் தங்க நகைகள் கேட்டு முனியப்பனின் வீட்டார் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சமரசம் செய்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 
 
இந்நிலையில் முருகேஸ்வரியை கணவன், மற்றும் அவரது தந்தை, தாய் ஆகியோர் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். கடந்த 09.10.2012ம் தேதி முனியப்பன் நண்பர்களுடன் வெளியூர் சென்று விட, முனியப்பனின் தாய் ராணி, தந்தை சக்கதிவேல் ஆகியோர் முருகேஸ்வரியை திண்டுக்கல் மாவட்டம் ஆர்.கோம்பை என்ற பகுதியில் உள்ள கரடுப்பகுதிக்கு அழைத்துச் சென்று முருகேஸ்வாரியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளனர். 
 
இது தொடர்பாக முருகேஸ்வரியின் தாய் சின்னபொன்னு பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என்று கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 
 
இதனை இன்று விசாரித்து அமர்வு நீதிபதி குணசேகரன், குற்றவாளிகளுக்கு கொலை செய்த குற்றத்திற்காக தலா இரட்டை ஆயுள் தண்டனையும், சாட்சியங்களை மறைத்த குற்றத்திற்காக 7 ஆண்டு சிறைதண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தும், அவற்றை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். 
 
இதனையடுத்து குற்றவாளிகள் 3 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர். மருமகள் கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சார்ந்த 3 பேருக்கு இரு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்த சம்பவத்தையடுத்து அங்கே பரபரப்பு நீடித்தது.
அடுத்த கட்டுரையில்