திருமணத்திற்கு மறுத்த பள்ளி மாணவியை குத்திக் கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2016 (18:04 IST)
திருமணம் செய்துகொள்ள மறுத்த பள்ளி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞருக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
 

 
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், சின்னதாராபுரம் அருகேயுள்ள அரங்கபாளையத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (45). கொத்தனார். இவரது மகள் பாரதிப்ரியா (14) சின்னதாராபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார் (25).
 
மனோஜ்குமார், பாரதிப்ரிவாயின் தந்தை ஈஸ்வரனுடன் கொத்தனார் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், பாரதிப்ரியாவை திருமணம் செய்துக் கொள்ள மனோஜ்குமார் விரும்பியுள்ளார். இதற்கு பாரதிப்ரியா மறுப்புத் தெரிவித்துள்ளார்.
 
இதனையடுத்து, கடந்த 2015ம்ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி பள்ளி செல்வதற்காக அரங்கபாளையத்தில் இருந்து சின்னதாராபுரத்திற்கு சைக்கிளில் பாரதிப்ரியா செல்லும்போது மோட்டார் சைக்கிளில் வந்த மனோஜ்குமார் கத்தியால் பாரதிப்ரியாவை குத்திவிட்டு தன்னைதானே குத்திக் கொண்டார்.
 
இதில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பாரதி ப்ரியா உயிரிழந்தார். காயமடைந்த மனோஜ்குமார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
 
இதுதொடர்பாக சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜ்குமாரை கைது செய்தனர். இவ்வழக்கில் கரூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி எம்.குணசேகரன் அளித்த தீர்ப்பில் கொலை குற்றத்திற்காக மனோஜ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்தார்.
அடுத்த கட்டுரையில்