கள்ளச்சாராயம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் நிச்சயமாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் குறித்து விவாதிக்க அனுமதி கோரி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் அப்பாவு கேள்வி நேரத்துக்குப் பின்னர் விவாதிக்கலாம் எனத் தெரிவிக்க அதிமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென்ற தங்களின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்கவில்லை என்றும் அதனால் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் கள்ளச் சாராய மரணங்கள் அதிகரிக்க பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்கு தாமதமாக வந்ததே காரணம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் கூறியது பச்சைப் போய் என்று எடப்பாடி தெரிவித்தார். கள்ளச்சாராயத்தால் மரணங்கள் ஏற்படவில்லை என்று மாவட்ட ஆட்சியர் தவறான தகவல் அளித்தார் என்று கூறினார்.
தங்களுக்கு கிடைத்த தகவலின்படி 183 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 55 பேர் பலியாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் உண்மையைச் சொல்லியிருந்தால் இத்தனை உயிர்கள் பறிபோயிருக்காது என்று எடப்பாடி தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனை வலையில் திமுக கவுன்சிலர்களுக்கு தொடர்பு இருக்கிறது என்றும் அதனால் அரசு அமைக்கும் விசாரணை ஆணையத்தால் உண்மை வெளிவராது என்றும் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் நிச்சயமாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டார்.
மேலும் சிபிஐ விசாரணை கோரி, அதிமுக நீதிமன்றத்தை நாடி இருப்பதாகவும், இந்த வழக்கில் நீதிபதிகள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என எடப்பாடி தெரிவித்தார்.