விஜயகாந்த் மறைவு: முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராகுல் காந்திஇரங்கல்.

வியாழன், 28 டிசம்பர் 2023 (11:04 IST)
விஜயகாந்த் மறைவுவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரங்கல் தெரிவித்துள்ளனர். 
 
தமிழக முதல்வர் தனது இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: அன்பிற்கினிய நண்பர் - தேசிய முற்போக்கு திராவிடக் கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன்.
 
நல்ல உள்ளத்திற்குச் சொந்தக்காரரான நண்பர் விஜயகாந்த் அவர்கள் திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான முத்திரைகளைப் பதித்த சாதனையாளர். நடிகராக, நடிகர் சங்கத் தலைவராக, அரசியல் கட்சித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஏற்றுக்கொண்ட பணி எதுவாக இருந்தாலும் அதில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன்னைச் சார்ந்த அனைவருக்கும் உறுதுணையாக இருந்தவர். குடும்ப நண்பராக என்னிடம் பழகியவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மீது என்றென்றும் தனிப்பாசம் கொண்டவர்.
 
தனது திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளைத் தலைவர் கலைஞர் தலைமையில் நடத்திய தமிழ் உணர்வாளரான நண்பர் விஜயகாந்த், நடிகர் சங்கத்தலைவராக இருந்தபோது தலைவர் கலைஞர் அவர்களின் கலையுலகப் பொன்விழாவைப் பாராட்டி, திரையுலகின் சார்பில் மாபெரும் விழா எடுத்து, தங்கப் பேனாவை பரிசாக அளித்தவர். தலைவர் கலைஞர் அவர்கள் உடல்நலன் குன்றியிருந்தபோது, நேரில் வந்து உடல்நலன் விசாரித்து சென்றதுடன், தலைவர் கலைஞர் மறைவெய்ந்தியபோது, வெளிநாட்டில் இருந்த நண்பர் விஜயகாந்த் கண்ணீர் மல்க காணொளி அனுப்பி தன் இரங்கலைத் தெரிவித்ததையும், வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் விமான நிலையத்திலிருந்து நள்ளிரவில் நேராகச் சென்னை கடற்கரையில் உள்ள தலைவர் கலைஞரின் ஓய்விடம் சென்று தன் வணக்கத்தைச் செலுத்தியதையும் எவரும் மறக்க முடியாது.
 
தமிழுணர்வும் தாராள மனமும் கொண்ட உன்னத மனிதரான நண்பர் விஜயகாந்த் அவர்களுடன் கலைத்துறையில் இணைந்து செயல்பட்ட காலங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வசனத்தில் விஜயகாந்த் கதாநாயகனான நடித்த ‘மக்கள் ஆணையிட்டால்’ என்ற படத்தில், கலைஞர் எழுதிய பாடல் காட்சியில் நானும் பங்கேற்றிருந்தது நினைவில் மலர்கிறது. அவருடனான நட்பு எந்தக் காலத்திலும், எத்தகைய அரசியல் சூழலிலும் மாறவேயில்லை. நண்பர் விஜயகாந்த் உடல்நலன் குன்றியிருந்த நிலையில், இரண்டு முறை நேரில் சென்று சந்தித்து, அவர் விரைந்து நலம் பெற விரும்பினேன். இயற்கை இரக்கமின்றி என் நண்பரின் வாழ்வை எடுத்துக் கொண்டிருக்கிறது.
 
கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும். இந்த மிகத் துயரமான சூழலில், என்னை நானே தேற்றிக் கொண்டு, கேப்டன் விஜயகாந்த்தை இழந்து தவிக்கும் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்களுக்கும், திரையுலகத்தினருக்கும், இரசிகர்களுக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. விஜயகாந்த் அவர்களுக்கு  அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.
 
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் அவர்களை ‘பசிபிணி தீர்த்த பொன்மன வள்ளல்’ என்று அஞ்சலி செலுத்துவோம். அவரை இழந்துவாடும், அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
விஜயகாந்த் மறைவு குறித்து பாஜக பிரபலம், நடிகை குஷ்பு கூறியதாவது: குஷ்பு: ஒரு ரத்தினத்தை இழந்துவிட்டோம். தங்க இதயம் கொண்ட மனிதர். உண்மையில் இன்னும் நிறைய சாதனை செய்ய தகுதியுள்ள ஒரு மனிதர். எங்கள் அன்புக்குரிய கேப்டன், எங்கள் விஜயகாந்த். ஐயா, நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி


ராகுல் காந்தி: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி இரங்கல் தனது சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அரசியல் மற்றும் சினிமாவிற்கு விஜயகாந்த் ஆற்றிய பங்களிப்பு லட்சக்கணக்கான இதயங்களில் அழியா முத்திரையாக உள்ளது. "துயரமான இந்த நேரத்தில் விஜயகாந்தின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்