நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ராஜ் பவனில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுதந்திர தின தேநீர் விருந்து புறக்கணிப்பிற்கான நேரடிக் காரணம் வெளியிடப்படவில்லை என்றாலும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே நிலவி வரும் தொடர்ச்சியான மோதல்களின் பின்னணியிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே, திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தன. கூட்டணி கட்சிகளின் முடிவுக்கு வலுசேர்க்கும் வகையில், முதலமைச்சரும் இந்த முடிவை எடுத்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.