ஸ்ரீரங்கம் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் – போலீஸ் இடையே கைகலப்பு! – என்ன நடந்தது?

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2023 (13:29 IST)
இன்று காலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் காவலர்கள் – பக்தர்கள் இடையே ஏற்பட்ட கைகலப்பு குறித்து கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.



ஸ்ரீரங்கத்தில் உள்ள ரெங்கநாதர் கோயில் இன்று முதல் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கி நடைபெற உள்ளது. இதற்காக ஏராளமான பக்தர்கள் ரங்கநாதர் கோவிலுக்கு வருகை தந்து வருகின்றனர். இன்று அமாவாசை என்பதால் அதிகாலை முதலே கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். சபரிமலை யாத்திரை சென்று வரும் ஐயப்ப பக்தர்கள் வரும் வழியில் உள்ள சிறப்பு மிக்க கோவில்களுக்கு சென்று வழிபடுவது வழக்கம். அவ்வாறாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் வெளிமாநிலங்களை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வந்துள்ளனர்.

காலையில் கூட்ட நெரிசலில் போலீஸார் பக்தர்களை வரிசைப்படுத்த முயன்றபோது வெளிமாநில ஐயப்ப பக்தர்களுக்கும், காவலர்களுக்கும் வாக்குவாதம் எழுந்து கை கலப்பாக மாறியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு எழுந்தது.

இந்நிலையில் காலையில் ஏற்பட்ட சண்டை குறித்து ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், வெளிமாநிலத்திலிருந்து வந்த அந்த பக்தர்கள் கோவிந்தா கோஷமிட்டபடி உண்டியலை பலமாக ஆட்டியதாகவும், அதை தடுக்க வந்த கோவில் பணியாளரை தலையை பிடித்து உண்டியலில் மோதி தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. இடையூறு செய்யும் அந்த பக்தர்களை வெளியேற்ற காவலர்கள் முயன்றபோது கலவரம் ஏற்பட்டதாக தெரிகிறது. சம்பந்தப்பட்ட அந்த பக்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்