4 தளத்திற்கு மட்டுமே அனுமதி; விதிகளை மீறிய சென்னை சில்க்ஸ் : வெளிவரும் உண்மைகள்

Webdunia
வியாழன், 1 ஜூன் 2017 (13:15 IST)
சென்னை சில்க்ஸ் நிறுவனத்தினர் மாநகராட்சி விதிகளை மீறி கட்டிடங்கள் எழுப்பியுள்ளதாக நகர்புற வீட்டு வசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


 

 
சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்ரு அதிகாலை 3.30 மணியளவில் கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. கட்டிடம் தனது ஸ்திரத்தன்மையை இழந்து விட்டதால், இன்று மாலை அந்த கட்டிடம் இடிக்கப்படுகிறது. இன்னும் 2 நாட்களில் அந்த கட்டிடம் தரை மட்டம் ஆக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
 
இந்நிலையில், சென்னை சில்க்ஸ் உட்பட தி.நகரில் பல கட்டிடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தது. இதுபற்றி செய்தியாளர்களிடம் இன்று பேட்டியளித்த வீட்டு வசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் “ சென்னை சில்க்ஸ் கட்டிடம் விதிகளை மீறி 7 தளங்களை கட்டியுள்ளது. இதை இடிப்பதற்கு 2006ம் ஆண்டே நோட்டிஸ் கொடுக்கப்பட்டது. எனவே, 5 முதல் 7 தளங்கள் இடிக்கப்பட்டது. ஆனால், கட்டிட உரிமையாளர்கள் நீதிமன்றத்திற்கு சென்று தடை உத்தரவு பெற்றதால் அந்த கட்டிட இடிப்பு பணி நிறுத்தப்பட்டது.
 
சென்னை தி.நகரில் மொத்தம் 89 கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது. எனவே, 2011ம் ஆண்டு 25 பெரிய நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதில் சென்னை சில்க்ஸ் கட்டிடமும் ஒன்று. ஆனால், நீதிமன்றம் மூலம் வழங்கப்பட்ட பொதுவான தீர்ப்பால் அந்த சீல் அகற்றப்பட்டது. தற்போது அந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 
 
இந்த சிக்கலை முறைப்படுத்த 113 சி பிரிவு கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்த பிரிவு இன்னும் அமுலுக்கு வரவில்லை. எனவே, கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைத்திருந்தோம். அந்த பிரிவு விரைவில் அமுலுக்கு வர இருக்கிறது. 113சி பிரிவு அமுலுக்கு வந்ததும், குறிப்பிட்ட விதிமீறல்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும்” என அமைச்சர் கூறினார்.
அடுத்த கட்டுரையில்